புயல் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் சாலையில் சமையல் செய்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கஜா புயல் நிவாரணம் முறையாக வழங்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் சாலையில் சமையல் செய்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒரத்தநாடு அருகே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-19 22:45 GMT
ஒரத்தநாடு,

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மூலம் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையாக நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் அடுப்பு வைத்து சமையல் செய்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்