ஓமலூர் அருகே, சாக்கடை வசதி கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஓமலூர் அருகே, சாக்கடை வசதி கேட்டு அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-19 23:00 GMT
ஓமலூர், 

ஓமலூரை அடுத்த காமலாபுரம் பிரிவு ரோடு முதல் நாலுகால்பாலம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார்சாலை ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையோரம் தடுப்புச்சுவர் மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சர்க்கரை செட்டிபட்டி புதுகடை காலனி அருகே தார்சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் சாக்கடை கால்வாய் சேதமடைந்து, சாக்கடைநீர் வெளியேற போதிய வசதி இல்லாததாலும், புதுகடை காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் மூடப்பட்டதாலும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. புதுகடை காலனியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனால் சாக்கடை தண்ணீர் தேங்கி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஓமலூர் தாலுகா அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். இதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாக்கடை வசதி கேட்டு நேற்று காலை 8.30 மணியளவில் ஓமலூர் - தின்னப்பட்டி ரோட்டில் புதுகடை காலனி அருகே அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள், ஏற்கனவே மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் இந்த பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஊரக வளர்ச்சி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்து சாக்கடை தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுத்தால்தான் மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதால், 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாக்கடை தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் அமைப்பதற்கான வழியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்