நீடாமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு வயலில் களை எடுத்தபோது பரிதாபம்

நீடாமங்கலம் அருகே வயலில் களை எடுத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-12-19 23:00 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி ஊராட்சி மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி பானுமதி(வயது 55). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதனால் பானுமதி மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கஜா புயலால் அறுந்து விழுந்த மின்கம்பிகளுக்கு பதிலாக புதிய மின்கம்பிகள் பொருத்தாமல், அறுந்து போன மின்கம்பிகள் மூலமாகவே மின் இணைப்பு கொடுத்ததால் காற்று வீசும்போது மின்கம்பிகள் இணைப்பு துண்டாகி வயர்கள் மீண்டும் அறுந்து விழுவதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்