அல்லிநகரத்தில் வீரப்ப அய்யனார் கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு - பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
வீரப்ப அய்யனார் கோவிலில் பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கோவிலுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி அல்லிநகரத்தில் மலையடிவார பகுதியில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில் கோவிலுக்கு பக்தர்கள் சென்றபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் பாலசுப்பிரமணியசாமி கோவில் செயல் அலுவலர் அண்ணாத்துரை சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
கோவிலில் இருந்த தீபாராதனை விளக்கு, மணி, பித்தளை சொம்பு, பித்தளை குடம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூஜை பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் செயல் அலுவலர் அண்ணாத்துரை புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணதேவேந்திரன் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இதற்கிடையே இந்து எழுச்சி முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அல்லிநகரம் வி.எம்.சாவடி தெரு அருகில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். கோவில் பாதுகாப்பு கருதி கோவில் பகுதியில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்யாததை கண்டித்தும், திருடர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேனி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.