ஊட்டி மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயம்

ஊட்டி மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-12-19 22:00 GMT
ஊட்டி,


தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கடந்த 1982-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே மரவியல் பூங்கா தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய சுமார் 60 வகை மரங்கள் பூங்காவில் நடப்பட்டு, அவை வளர்க்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்தது. இதற்கிடையே பூங்காவை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பொலிவிழந்து காணப்பட்டது. இதையடுத்து பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 2006-2007-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் செலவில் பூங்கா புனரமைக்கப்பட்டு, சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டது. மேலும் கூடுதலாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பூங்காவின் மொத்த பரப்பளவு 1.58 ஹெக்டேர் ஆகும். பூங்காவில் நடைபாதையின் இருபுறங்களிலும் பல்வேறு வகையான மலர் செடிகள் காணப்படுகிறது. மரங்களை சுற்றிலும் அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. உயர்ந்த மரங்களுக்கு நடுவே பசுமையான புல்வெளிகள் இருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை கவருகிறது.

மரவியல் பூங்காவில் அமருவதற்காக மரத்தினால் ஆன இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. பூங்காவை ரசிக்கும் வகையில் அழகான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூங்காவையொட்டி ஊட்டி மலை ரெயில் செல்லும் போது, சத்தம் கேட்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் அங்குள்ள மரங்களில் அரிய வகை பறவைகள் காணப்படுகிறது. இந்த பூங்காவை சுற்றுலா பயணிகள் நுழைவுக் கட்டணம் இன்றி ரசித்து வந்தனர். அப்பகுதி பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை திடீரென மரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நுழைவுக்கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு-ரூ.10, சிறியவர்களுக்கு-ரூ.5 நுழைவுக்கட்டணம், கேமரா-ரூ.10, வீடியோ கேமரா-ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு குறித்த பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக்கட்டணம் வசூலிப்பதற்காக டிக்கெட் கவுன்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 பேர் பணியில் இருக்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்கா செயல்படும்.

இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:-

இதுவரை இலவசமாக பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் பூங்காவை கண்டு ரசித்து வந்தனர். தற்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால், அவர்கள் அவதி அடைந்து உள்ளனர். கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் இருந்த போது, பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. இதனால் நுழைவுக்கட்டணம் நிர்ணயிப்பால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் குறையும். தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், வாடகை வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து குறைந்த கட்டணம் உள்ள கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்காவுக்கு அழைத்து செல்கின்றனர். இதே நிலைமை நீடித்தால் அந்த பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்