கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குறுகிய வளைவுகளை விரிவுபடுத்தும் பணி தீவிரம் மண்டல பொறியாளர் ஆய்வு
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குறுகிய வளைவுகளை விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மண்டல பொறியாளர் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி,
சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கோத்தகிரி வழியாகவே ஊட்டிக்கு வந்து, செல்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வரும் சாலையில் கொண்டை ஊசி வளைவுகள் குறைவாக உள்ளதாலும், சாலையின் இருபுறங்களிலும் இயற்கை காட்சிகள் நிறைந்து இருப்பதாலும் இந்த வழியை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை விரிவாக்கம் செய்து, தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர் வரும் கோடை சீசனில் நீலகிரியில் நடத்தப்படும் கோடை விழா, மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழ கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளையும், சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி நீலகிரியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இது தவிர கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தவிட்டுமேடு அருகே 2 இடங்களில் உள்ள குறுகிய வளைவுகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டு, பணி தொடங்கியது. தற்போது அந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியை நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் கூறும்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக குன்னூர், ஊட்டிக்கு செல்லும் இந்த சாலையை மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சாலையில் உள்ள ஆபத்தான குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இந்த பணி நிறைவு பெற்றவுடன், தட்டப்பள்ளம் பகுதியிலும் விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்னதாக முடிக்கப்படும். எனவே கோடை சீசனில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல், எளிதில் வந்து செல்ல முடியும் என்றார். அப்போது கோட்ட பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் பாலமுரளி ஆகியோர் உடனிருந்தனர்.