கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 550 பஸ்கள் இயக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பெங்களூருவில் இருந்து தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 550 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.

Update: 2018-12-18 22:50 GMT
பெங்களூரு, 

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பெங்களூருவில் இருந்து தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 550 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.

கூடுதலாக 550 பஸ்கள்

வருகிற 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பெங்களூருவில் இருந்து கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கும், தமிழகம் உள்பட வெளிமாநிலங்களுக்கும் கூடுதலாக 550 பஸ்களை இயக்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) முடிவு செய்துள்ளது.

அதன்படி, வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகளில் பெங்களூருவில் இருந்து பிற பகுதிகளுக்கும், 25-ந் தேதி பிற இடங்களில் இருந்து பெங்களூருவுக்கும் கூடுதலாக பஸ்கள் இயங்க உள்ளன.

தமிழகத்துக்கு...

பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் இருந்து உடுப்பி, சிவமொக்கா, ஹாசன், தாவணகெரே, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பல், யாதகிரி, பீதர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும், திருப்பதி உள்ளிட்ட பிற இடங்களுக்கும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.

மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, குடகு ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கும், சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பிற இடங்களுக்கும் கூடுதலாக பஸ்கள் இயங்க உள்ளன.

கட்டண சலுகை

இதுதவிர பெங்களூரு விஜயநகர், ஜெயநகர் 4-வது பிளாக், ஜாலஹள்ளி கிராஸ், நவரங்(ராஜாஜிநகர்), மல்லேசுவரம் 18-வது கிராஸ், பனசங்கரி, ஜீவன்பீமாநகர், ஐ.டி.ஐ. கேட், கங்காநகர், கெங்கேரி சேட்டிலைட் டவுன் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபூர், சிருங்கேரி, உரநாடு, குக்கேசுப்பிரமணியா, தர்மஸ்தலா உள்பட பல்வேறு இடங்களுக்கும் கூடுதலாக பஸ்கள் இயங்கும்.

இந்த பஸ்களில் பயணம் செய்ய விரும்புபவர்கள்www.ksrtc.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. மேலும், 4 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் ஒரே டிக்கெட்டில் முன்பதிவு செய்தால் பயண கட்டணத்தில் 5 சதவீதமும், வெளியூருக்கு சென்று, திரும்புவதற்கு சேர்த்து முன்பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 10 சதவீதமும் சலுகையாக வழங்கப்படும்.

இந்த தகவல் கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்