பிரமாண்ட கோதண்டராமர் சிலை தீவனூரில் இருந்து புறப்பட்டது லாரி டயர் வெடித்ததால் போக்குவரத்து பாதிப்பு
பிரமாண்ட கோதண்டராமர் சிலையை ஏற்றி வந்த லாரி தீவனூரில் இருந்து நேற்று புறப்பட்டது. அப்போது, திடீரென லாரியின் டயர் வெடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செஞ்சி,
பெங்களூரு ஈஜிபுரம் பகுதியில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வந்தவாசி அருகே உள்ள அகரகொரக்கோட்டை கிராமத்தில் வடிவமைக்கப்பட்ட 108 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக கொண்டு செல்வதற்காக அனுமதி சான்று கேட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் புறவழிச்சாலையில் சிலையுடன் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையின் வழியாக எடுத்து செல்ல அனுமதி கேட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துவிட்டது.
இதையடுத்து கார்கோ லாரி நேற்று மாலை தீவனூரில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. செஞ்சி அடுத்த கொணக்கம்பட்டை கடந்து தொண்டியாற்று பாலம் அருகே வந்தபோது கார்கோ லாரியின் டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் லாரி அதேஇடத்தில் நிறுத்தப்பட்டதோடு, மாற்று டயர் பொருத்தப்பட்டு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. இதனால் திண்டிவனம்-செஞ்சி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட லாரி வல்லம், நாட்டார்மங்கலம் வழியாக செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையோரம் உள்ள வீரன் சிலை அமைந்துள்ள இடத்தை வந்தடைந்தது. அங்கு தற்போது லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிலையை எடுத்து செல்லும் குழு ஒருங்கிணைப்பாளரும், பா.ஜனதா திருவண்ணாமலை மாவட்ட தலைவருமான சாய்பாபா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் நாகார்ஜூன் ஆகியோர் உடன் வந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சாய்பாபா கூறுகையில், சங்கராபரணி ஆற்றங்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி நாளை (அதாவது இன்று புதன்கிழமை) காலை மேல்களவாய் கூட்டுரோடு, சந்தைதோப்பு, சிங்கவரம் சாலை, தேசூர்பாட்டை வழியாக பெங்களூரு செல்லும் என்றார்.