12 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் கோலார் தங்கவயலில் தொழிற்பேட்டை அமைக்க முடிவு சட்டசபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தகவல்
12 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் கோலார் தங்கவயலில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று சட்டசபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு,
12 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் கோலார் தங்கவயலில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று சட்டசபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
வேலை வாய்ப்பு இழந்தனர்
கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தில் கோலார் தங்கவயல் உறுப்பினர் ரூபா கலா சசிதர், “கோலார் தங்கவயலில் செயல்பட்ட தங்க சுரங்கம் கடந்த 2001-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
அதற்கு தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கோலார் தங்கவயலில் உள்ள தங்க சுரங்கத்தை மத்திய அரசு நடத்தியது. அந்த தங்க சுரங்கம் மூடப்பட்டுவிட்டது. அங்கு 12 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம் தற்போது பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட்(பி.ஜி.எம்.எல்.) நிறுவனத்தின் வசம் உள்ளது.
தொழிற்பேட்டை
அந்த நிலத்தில், பெங்களூரு-சென்னை தொழில் விரைவுச் சாலை திட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதுதொடர்பாக கடந்த 13-ந் தேதி முதல்-மந்திரி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
அதில் மத்திய அரசின் கனிம சுரங்கத்துறையுடன் பேசி அந்த நிலத்தை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. தொழில் வளர்ச்சித்துறை கமிஷனர் தலைமையில் கனிமம், புவியியல் துறை இயக்குனர் மற்றும் கோலார் மாவட்ட கலெக்டர் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.1,600 கோடி கடன்
அந்த குழு, 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் நிலை குறித்து ஒரு அறிக்கை தயாரித்து வழங்கும். தங்க சுரங்கம் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அந்த பொறுப்பு மத்திய அரசுக்கு சேர்ந்தது. ஆயினும் இங்கு தொழிற்பேட்டை தொடங்குவதால், அவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மத்திய அரசின் தகவல்படி, அந்த நிலத்திற்கு தொடர்பாக ரூ.1,600 கோடி கடன் இருக்கிறது. அந்த தொகையை செலுத்த மாநில அரசு தயாராக உள்ளது. ஆனால் இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. இதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த பணியை செய்ய தான் நாங்கள் குழு அமைத்துள்ளோம். அதன் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.