கிராம தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம தபால் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்ட கிராம தபால் நிலையங்கள் பூட்டிக்கிடந்தன.
திண்டுக்கல்,
கிராம தபால் ஊழியர் களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும், பணி மாறுதல் முறையை எளிமைப்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கிராம நிர்வாக ஊழியர்கள் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்ய வேண்டும், பணி நேரத்தை 8 மணி நேரமாக்க வேண்டும் என்பன உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர கிராம தபால் ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று முன்தினம் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் அறிவித்தனர். அதன்படி கிராம தபால் ஊழியர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 355 கிராம தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு பகுதி நேர ஊழியர்களாக பணிபுரிபவர்கள் அனைவரும் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கிராம தபால் நிலையங்கள் பூட்டிக் கிடந்தன. இதனால் வரவு- செலவு அறிக்கை தயாரித்தல், தபால் வினியோகம் செய்தல், விரைவு தபால் பதிவு செய்தல், ‘மணி ஆர்டர்’ வழங்குதல் உள்ளிட்ட பணிகள் முடங்கின.
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு கிராம தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் மாணிக்கம், பொருளாளர் ராமராஜ், செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.