கோவையில் தொழில்நிறுவனங்கள் மூடல்: 5 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு - பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பேச்சு

கோவையில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால் 5 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

Update: 2018-12-18 22:15 GMT
மேட்டுப்பாளையம்,


பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் கோவையில் நடக்கிறது. இதையொட்டி வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு மாநில துணைபொது செயலாளர் விசாலாட்சி தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வக்கீல் ஆனந்தகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் 5 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவெடுத்து உள்ளனர். தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் 1 கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கல்விக்கொள்கையாகும்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தேர்தலில் அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.வரி விதிப்பு எவ்வளவு பாதித்தது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி என்பதை கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தான் முடிவு செய்வோம். ஊட்டியில் செயல்பட்டு வரும் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடுவதைக்கண்டித்து ஊட்டியில் நாளை (வியாழக்கிழமை) எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நடிகர் ரஞ்சித், மாநில துணைத் தலைவர் மணிகண்டன், தங்கராஜ், வக்கீல் கே.அய்.பழனிசாமி, மின்னல் சிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஷாஜகான் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்