திருப்பூரில் வாலிபரை கொலை செய்த உறவினர் கைது; முன்விரோதம் காரணமாக தீர்த்துக்கட்டியது அம்பலம்

திருப்பூரில் வாலிபரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Update: 2018-12-19 00:15 GMT

திருப்பூர்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தேவதானப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது 20). திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் ஆறுமுகம்(26). இவர்கள் இருவரும் திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம்நகரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

முருகனின் உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த சசிகுமார்(22) திருப்பூர் மாஸ்கோ நகரில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 16–ந் தேதி காலை சசிகுமார், முருகனின் அறைக்கு வந்துள்ளார். அதன்பிறகு முருகன், ஆறுமுகம், சசிகுமார் ஆகியோர் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு சசிகுமார் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் மாலையில் சசிகுமார் மீண்டும் முருகனை மது அருந்த அழைத்துள்ளார். ஆனால் முருகன் அதற்கு மறுத்து விட்டார். அதன்பிறகு முருகனும், ஆறுமுகமும் வெளியே சென்று மது அருந்தி விட்டு இரவு அறைக்கு சென்று கொண்டிருந்துள்ளனர். 8.30 மணி அளவில் வசந்தம் நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த சசிகுமார், முருகனை வழிமறித்துள்ளார். தான் மது அருந்த அழைத்தபோது வராமல் ஆறுமுகத்துடன் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றவே சசிகுமார் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனின் கழுத்தை அறுத்ததுடன் சரமாரியாக உடலில் குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் சசிகுமார் அங்கிருந்து தப்பினார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வைத்து சசிகுமாரை போலீசார் நேற்று பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். சசிகுமார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–

சசிகுமாரும், முருகனும் உறவினர்கள். ஏற்கனவே பெண் விவகாரம் தொடர்பாக சசிகுமாருக்கும், முருகனுக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் முருகன் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து சசிகுமாரை தாக்கியுள்ளனர். இதனால் முருகன் மீது அவருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

முருகனை தீர்த்துக்கட்ட சசிகுமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடன் சேர்ந்து மது குடிக்க வருமாறு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சசிகுமார் முருகனை அழைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வருவதாக முருகன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து முருகன் தங்கியிருந்த அறைக்கு சென்று சசிகுமார் மது குடித்துள்ளார். அதன்பிறகு மது குடிக்க தனியாக முருகனை அழைத்துள்ளார். அவர் செல்லாததால் மீண்டும் இரவு வந்த சசிகுமார், முருகனிடம் தகராறு செய்ததுடன், தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை குத்திக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சசிகுமாரை போலீசார் கைது செய்தனர். சசிகுமார் மீது ஏற்கனவே மதுரை போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கும், அனுப்பர்பாளையத்தில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்