ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்- அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், அரசியல் கட்சியினருடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், அரசியல் கட்சியினருடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் ஒருவித பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜித் சிங் கலோன், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேல்முறையீடு
கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வலிமையான ஆவணங்களுடன் அரசு மேல் முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மக்கள் பக்கம் தான் உள்ளது. ஆகையால் மக்கள் போராட தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதே போன்று போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. அப்போது, வெவ்வேறு பகுதியில் இருந்து வந்த மக்கள் போராட்டத்தை சீர்குலைத்து விட்டனர். அது போன்ற நிலை வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு சட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற அரசு கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கருத்தை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இது போன்ற கூட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து பேச வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டும் இதே போன்ற அரசாணை மூலம் ஆலை மூடப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் ஆலை இயங்க அனுமதி அளித்தது. அதே போன்ற நிலை தற்போதும் வந்து விடக்கூடாது. ஆலை மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதன் மீது ஏன் மாநில அரசு நடவடிக்கை எடுக்க கூடாது. உடனடியாக ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பரபரப்பு
மேலும் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட செயலாளர் ஹென்றிதாமஸ் தலைமையில் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் கூட்டத்தில் பெரும்பாலும் ஆலைக்கு ஆதரவானவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.