கிராமப்புற தபால் ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்
கிராமப்புற தபால் ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
ஊதிய உயர்வு, கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராம தபால் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் கிராம தபால் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி சிவகங்கை வாரச்சந்தை சாலையில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு கிராமப்புற தபால் ஊழியர்கள் சங்கத்தின் கோட்டத் தலைவர் குருநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்க மாநில உதவிச் செயலர் செல்வம் கூறியதாவது:– பணி நிரந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தி எங்களது சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 25 நாட்களுக்கு மேல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்பட பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆகவே மீண்டும் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதுசம்பந்தமாக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.