ஏர்வாடி தர்காவில் தொலைந்து போன மகனை 22 ஆண்டுகளாக தேடி அலையும் தாய்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன தனது மகனை தொடர்ந்து தேடி பாசப்போராட்டம் நடத்தி வரும் தாய் நேற்று கலெக்டரிடம் மீண்டும் மனு கொடுத்தார்.

Update: 2018-12-17 23:44 GMT
ராமநாதபுரம்,

நாகை மாவட்டம் அய்யடிமங்கலத்தை சேர்ந்தவர் பாலகுரு என்பவரின் மனைவி விஜயா. இவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் எனது கணவர் மற்றும் 4 மாத குழந்தை சேகர் ஆகியோர் கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி ஏர்வாடி தர்காவிற்கு பிரார்த்தனைக்காக வந்திருந்தோம். பிரார்த்தனை முடிந்து தர்கா பகுதியில் உள்ள மரத்தடியில் தங்கியிருந்தபோது காலையில் எழுந்து பார்த்தபோது எனது 4 மாத குழந்தை சேகரை காணவில்லை. யாரோ கடத்தி சென்றுவிட்டனர்.

எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனது குழந்தையை யாருக்கோ தத்து கொடுப்பதற்காக மர்ம கும்பல் கடத்தி சென்றுவிட்டதாக தெரியவருகிறது. எனது மகனை என்றாவது ஒருநாள் கண்டுபிடித்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் இத்தனை ஆண்டு காலமாக தேடிவருகிறேன். மாவட்ட நிர்வாகம், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு என்று மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தும் இதுவரை போலீசார் கண்டுபிடித்து ஒப்படைக்கவில்லை. 22 ஆண்டுகளாக தேடியும் இதுவரை எனது மகன் கிடைக்கவில்லை. எனது வாழ்நாள் முடிவதற்குமுன் ஒருநாளாவது எனது மகனை கண்ணால் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக உயிர் உள்ளவரை எனது மகனை தேடி போராடுவேன். எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

அவர் தன்னுடன் எனது மகன் காளிதாசன், மகள் கவுசல்யா ஆகியோரையும் அழைத்து சென்றுவிட்டார். ஏற்கனவே எனது மகனை பறிகொடுத்து தவித்து வந்த நிலையில் தற்போது எனது கணவர் மற்றும் குழந்தைகளையும் பிரிந்து வாழ்கிறேன். வாழ வழியின்றி நாகை மாவட்டம் தேவூர் முத்துமாரியம்மன் கோவிலில் தங்கி பிச்சையெடுத்து வாழ்க்கையை கடத்தி வருகிறேன்.

என் மீது கருணை கூர்ந்து 22 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எனது மகனை கண்டுபிடித்து தாருங்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து போலீசார் மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்