விபத்தை தவிர்த்த 5 ரெயில் டிரைவர்களுக்கு பொது மேலாளர் பாராட்டு
விபத்தை தவிர்த்த 5 ரெயில் டிரைவர்களுக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை,
சேலம்-மேட்டூர் அணை பிரிவு இடையே கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி சரக்கு ரெயிலை அபிலாஷ் குமார் மற்றும் பிரகாஷ் மீனா ஆகியோர் ஓட்டினர். இந்த நிலையில் ரெயில் மேச்சேரி மற்றும் மேட்டூர் அணை ரெயில் நிலையம் இடையே வந்தபோது திடீரென ரெயிலில் அதிர்வு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த ரெயில் கார்டு மற்றும் மேட்டூர் அணை ரெயில் நிலைய அதிகாரிக்கு இந்த அதிர்வு குறித்த தகவலை அபிலாஷ் குமார் மற்றும் பிரகாஷ் மீனா கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மேச்சேரி மற்றும் மேட்டூர் அணை ரெயில் நிலையம் இடையே ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த விரிசலை சரிசெய்து விபத்தை தவிர்த்தனர்.
இதைப்போல் கடந்த டிசம்பர் 3-ந்தேதி பேட்டவாய்த்தலை மற்றும் குளித்தலை பிரிவில் நிரஞ்சன் லால் மீனா, குன்தன் குமார் மற்றும் கோவை-பாலக்காடு பிரிவில் ரமேஷ் குமார் ஆகிய ரெயில் ஓட்டுனர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கண்டறிந்து விபத்தை தவிர்த்தனர். இந்த நிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா இந்த 5 ரெயில் டிரைவர்களையும் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.