ராமையன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் -வியாபாரிகள் கடையடைப்பு பாதாள சாக்கடை கழிவுநீரை குளத்தில் திறப்பதற்கு எதிர்ப்பு
நெல்லை ராமையன்பட்டியில் பாதாள சாக்கடை கழிவு நீரை நேரடியாக குளத்தில் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமையன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி வியாபாரிகளும் கடைகளை அடைத்தனர்.
நெல்லை,
நெல்லை ராமையன்பட்டியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கு மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அங்குள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில், கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கழிவுகளாக அருகில் உள்ள கால்வாய் மூலம் குளத்துக்கு திறந்து விடுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதைக் கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமையன்பட்டி பகுதி மக்கள் ராமையன்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். அப்போது வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இந்தநிலையில் நேற்று பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் அந்த பகுதி குளங்களுக்கு திறந்து விடப்பட்டு இருப்பதை கண்டித்து ராமையன்பட்டியில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ராமையன்பட்டி டவுன் ரோடு, சங்கரன்கோவில் ரோடு, தச்சநல்லூர் ரோடு ஆகிய பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன
மேலும் ராமையன்பட்டி பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ராமையன்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் முன்பு நேற்று காலை திரண்டனர். அவர்கள் அங்கு பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “மாநகரில் சேரும் அனைத்து குப்பைகளும் ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. அவ்வப்போது குப்பைக்கிடங்கில் பற்றி எரியும் தீயால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு எங்கள் பகுதி மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
ராமையன்பட்டியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டு நல்ல தண்ணீராக வெளியேற்றப்படும் என்று கூறினர். ஆனால் கடந்த சில நாட்களாக கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே அங்குள்ள கால்வாயில் திறந்து விடுகின்றனர். இந்த கழிவுநீர் அருகில் உள்ள புதுக்குளம், இலந்தைகுளம், சீனியப்பன் திருத்துகுளம் ஆகிய குளங்களில் சென்று கலக்கிறது.
இதனால் வெளியேறும் துர்நாற்றம் மற்றும் நுண்ணுயிர் கிருமிகளால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. மேலும் மாநகராட்சி பகுதியில் புதிதாக கூடுதலாக அமைக்கப்படும் பாதாள சாக்கடை திட்ட கழிவு நீரையும் ராமையன்பட்டிக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டு உள்ளனர். இதை வேறு காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று சுத்தி கரிக்க வேண்டும்” என்றனர்.