பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்

பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

Update: 2018-12-17 01:33 GMT
காலாப்பட்டு,

புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது தூய்மைக்கும், நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நேற்று காலை காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகம், அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் புதுச்சேரி வடக்கு பகுதியின் நீர்மட்டம் 4 மீட்டர் அளவுக்கு உயர்ந்து இருப்பது தெரியவந்தது.

கவர்னருடன் புதுவை மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை, வேளாண்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் சென்று இருந்தனர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சராசரி மழை அளவு இருந்தாலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை உருவாக்கியதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் தற்போதுள்ள நிலத்தடி நீர் மட்டத்தின் விவரத்தை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வேளாண்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை ஒவ்வொரு பகுதிகளிலும் தேவைப்படும் நீரின் அளவை கணக்கிட வேண்டும். குறிப்பாக விவசாயம், தொழிற்சாலைகள், வீடுகளுக்கு எவ்வளவு தேவை என கணக்கிட வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

அதிக நீர் உறிஞ்சும் பயிர்களுக்கு பதிலாக மாற்று பயிர்களை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வேளாண்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் உள்ள மழைநீர் குட்டையை சுற்றி மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். பல்கலைக்கழகத்தில் மேலும் பல இடங்களில் மழைநீர் சேகரிக்கும் குட்டைகளை அதிகப்படுத்தவும், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நிலத்தடி நீரை சேகரிக்க மேலும் 9 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை உருவாக்க உள்ளனர். மாணவர்களையும் இதில் ஈடுபடுத்த வேண்டும், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்