கூடலூரில், அறுவடைக்கு தயாராகும் காபி பழங்கள்
கூடலூர் பகுதியில் காபி பழங்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் குறுமிளகு, காபி, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைகிறது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் குறுமிளகு விளைச்சல் பாதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் அளவுக்கு அதிகமாக மழையால் வாடல் நோய் தாக்கி குறுமிளகு பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் காபி பயிர்கள் மட்டும் விவசாயிகளுக்கு கணிசமான வருவாயை ஈட்டி தருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காபி விளைவிக்கப்படுகிறது. அராபிக்கா, ரொபஸ்டா என 2 வகை உள்ளது. இதேபோல் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் காபி விளைகிறது. மே மாதம் பெய்யும் கோடை மழையை தொடர்ந்து காபி செடிகள் பூக்க தொடங்குகிறது. பின்னர் கூடலூர் பகுதியில் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்குகிறது.
இந்த காலக்கட்டத்தில் செடிகளில் காபி காய்கள் விளைகிறது. டிசம்பர் மாதம் காபி காய்கள் பழுக்க தொடங்கி உள்ளது. அதன்பின்னர் மாத கடைசியில் காபி பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. கூடலூர் பகுதியில் தற்போது காபி காய்கள் பழுத்து வருகிறது. இதனால் மாத கடைசியில் காபி பழங்கள் அறுவடை செய்யப்பட உள்ளது. இதனால் அதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து காபி விவசாயிகள் கூறியதாவது:-
தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து விட்டது. குறுமிளகு பயிர் நல்ல லாபம் கிடைத்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் காபி விவசாயம் மட்டுமே கை கொடுத்து வருகிறது. தற்போது காபி செடிகளில் விளைந்துள்ள காய்கள் பழுக்க தொடங்கி உள்ளது.
இதனால் மாத கடைசி அல்லது ஜனவரி முதல்வாரத்தில் அறுவடை பணி தொடங்கப்படும். தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை காபி பழங்கள் அறுவடை செய்யப்படும். அதன்பின்னர் கோடை மழை பெய்ய தொடங்கியதும், அடுத்த கட்ட விளைச்சலுக்காக காபி செடிகள் மீண்டும் பூக்க தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.