அரசு ஆஸ்பத்திரிகளில் மாத்திரைகள் பாக்கெட்டுகளில் வழங்கப்படுமா? - நோயாளிகள் எதிர்பார்ப்பு
அரசு ஆஸ்பத்திரிகளில் மாத்திரைகள் பாக்கெட்டுகளில் வழங்கப்படுமா? என்று நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
கூடலூர்,
தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தினமும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பெயர் பதிவு செய்த உடன் வழங்கப்படும் ரசீதை கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி நோயின் தன்மைக்கு ஏற்ப நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அப்போது மருத்துவர் நோயாளிக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்க பரிந்துரை செய்கிறார்.
இதற்கு ஏற்ப அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகள் வழங்கப்படுகிறது. சராசரியாக ஒரு நோயாளிக்கு 4 வகையான மாத்திரைகள் 3 வேளைக்கு என கணக்கீட்டு சில நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் அரசு ஆஸ்பத்திரிக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் பாக்கெட்டுகளில் வழங்கப்படுவது இல்லை. மேலும் மாத்திரைகளை எந்த வேளைக்கு சாப்பிட வேண்டும் என குறிப்பிடுவது இல்லை.
மருத்துவ ஊழியர்கள் மொத்தமாக மாத்திரைகளை வழங்குவதால் வீடுகளுக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் எந்த மாத்திரைகளை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். இதனால் காலையில் சாப்பிட வேண்டிய மாத்திரையை மதியம் அல்லது இரவு வேளைக்கு என மாற்றி சாப்பிடுகின் றனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் ஆதிவாசிகள், தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் மருந்து, மாத்திரைகள் குறித்த குறிப்புகள் எதுவும் வழங்கப்படாததால் குழப்பம் அடைந்து விடுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள், நோயாளிகள் கூறியதாவது:-
தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதற்காக செல்லும் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் பாக்கெட்டுகளில் நிரப்பி காலை அல்லது மதியம் அல்லது இரவு என குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகள் பொதுமக்களின் கைகளில் வழங்கப்படுகிறது. பொதுவாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கிராமப்புற மக்கள் தான் அதிகளவு வருகின்றனர். ஆனால் மருந்து மாத்திரைகள் வழங்கும்போது பாக்கெட்டுகளில் வழங்குவது இல்லை. மேலும் மாத்திரைகள் சாப்பிடும் கால நேரம் குறித்து எந்த குறிப்புகளும் தருவது இல்லை. எனவே இனி வரும் காலங்களில் அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் மாத்திரைகளை குறிப்புடன் கூடிய பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.