சேலத்தில் மொபட் மீது லாரி மோதல்: காய்கறி வியாபாரி பலி இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி பொதுமக்கள் சாலைமறியல்
சேலத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி பலியானார். இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்காம்பட்டி காந்திநகர் காலனியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 50), காய்கறி வியாபாரி. இவருடைய நண்பர் பழனிசாமி. இருவரும் நேற்று இரவு மொபட்டில் வீராணத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பழனிசாமி ஓட்டி சென்றார். அண்ணாமலை பின்னால் உட்கார்ந்து சென்றார்.
சுக்காம்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாமலை சாலையில் விழுந்தார். அப்போது அவர் மீது லாரி சக்கரம் ஏறியது. இதில் உடல் நசுங்கி அண்ணாமலை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பழனிசாமிக்கு காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், ‘சுக்காம்பட்டி பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை தடுக்க வேண்டும். மேலும் இறந்து போன அண்ணாமலையின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கூறி சுக்காம்பட்டி பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.