தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குதிரைமொழி கிராமம் தேரிகுடியிருப்பில் கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மதியம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை வில்லிசையும் நடைபெற்று வந்தது.
கடந்த 14-ந்தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. இதில் குடும்பத்துடன் வந்து கோவிலில் தங்கியிருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், மாவிளக்கு பூஜை, திருவிளக்கு பூஜை, உற்சவர் வீதிஉலா, சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நேற்று நடந்தது.
இதையொட்டி காலை 6 மணிக்கு 108 பால்குடம் ஊர்வலம், 9 மணிக்கு வெள்ளிகுடத்தில் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வருதல், 10 மணிக்கு பேச்சியம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு சுவாமி கள்ளர் வெட்டுக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் மாலை 4.40 மணிக்கு கள்ளர் வெட்டு நடந்தது. இதை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
பின்னர், கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் பக்தர்கள் போட்டி போட்டு புனித மண் எடுத்தனர். தூத்துக்குடி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் புனிதமண் எடுத்தனர். அதை அவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்போது அந்த மண்ணை எடுத்து பயன்படுத்துவார்கள்.
பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து கடந்த 3 நாட்களாக தேரிகுடியிருப்புக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் விசுவநாத், செயல் அலுவலர் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.