உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் மூலம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் மூலம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை,
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கு என உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியுடையவராவர். இதன் உறுப்பினர்கள் 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
பதிவு பெற்ற உறுப்பினருக்கு ஓர் அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும். உறுப்பினர் பதிவு செய்து 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
இந்த நல வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி செலவு தொகையை ஈடுசெய்தல், முதியோர் ஓய்வூதியம், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெறப்படின் வேறு வாரியங்களில் இருந்து இதே நலத்திட்ட உதவிகள் பெற இயலாது.
இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்துக் கொள்ளலாம். விண்ணப்பபடிவங்கள் www.bc-m-b-c-mw.tn.gov.in/we-l-fs-c-h-e-ms-m-i-n-o-r-it-ies.htm என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.