அரங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு: 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நாமக்கல் அரங்க நாதர் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக் கிறது. இதையொட்டி பக்தர்களுக்கு வழங்க 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-12-15 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி.8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்யபூஜை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜை செய்து அதிகாலை 4.30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய வருவார்கள். எனவே கோவில் படிவாசலில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு நாமக்கல் பகுதியை சேர்ந்த சில பக்தர்கள் சேர்ந்து 60 ஆயிரம் லட்டுகளை தயாரித்து பிரசாதமாக வழங்க முடிவு செய்து உள்ளனர். இதையடுத்து லட்டு தயாரிக்கும் பணி கோவில் மண்டபத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் அருகே உள்ள மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயமணி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது பக்தர்களுக்கு 60 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு 1,700 கிலோ சர்க்கரை, 700 கிலோ கடலை மாவு, முந்திரி 30 கிலோ, திராட்சை 30 கிலோ, 20 கிலோ கல்கண்டு, 10 கிலோ லவங்கம், 208 லிட்டர் நெய் போன்றவற்றை பயன்படுத்தி லட்டு தயார் செய்து வருகிறோம். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் லட்டு தயாரிக்கும் பணி நிறைவடையும் என்றனர்.

மேலும் செய்திகள்