மாமனார்- மருமகன் மோதல்: சமரசம் செய்ய முயன்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கீரிப்பாறை அருகே மாமனார்-மருமகன் இடையே மோதல் ஏற்பட்டது. அதை சமரசம் செய்ய முயன்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2018-12-14 22:45 GMT
அழகியபாண்டியபுரம்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கீரிப்பாறை அருகே வெள்ளம்பிமலை பகுதியை சேர்ந்தவர் சிவன் (வயது 29), கூலி தொழிலாளி. இவருடைய மனைவியின் தந்தை ரவீந்திரன். இவர் தற்போது, சிவனின் வீட்டில் தங்கியுள்ளார். ரவீந்திரனுக்கு மது பழக்கம் உண்டு.

சம்பவத்தன்று அதிக மதுபோதையில் வீட்டுக்கு வந்து, சிவனை தரக்குறைவாக பேசிக்கொண்டிருந்தார். இதனை சிவன் தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த சிவன் அரிவாளை எடுத்து கொண்டு மாமனாரை வெட்ட பாய்ந்தார்.

அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயந்தி (32) என்பவர் இருவரையும் சமரசம் செய்யும் முயற்சியில் சிவனை தடுத்தார். இதில் எதிர்பாராத விதமாக ஜெயந்தி மீது அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கீரிப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்