கேரளாவில் முழு அடைப்பு: தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்
கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திருவனந்தபுரத்துக்கு செல்லும் தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.
களியக்காவிளை,
சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன்பு பா.ஜனதாவினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வேணுகோபால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து கேரள அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று கேரளாவில் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தினமும் ஏராளமான தமிழக அரசு பஸ்கள் சென்று வருகின்றன. நேற்று முழு அடைப்பு போராட்டத்தையொட்டி இந்த பஸ்கள் அனைத்தும் எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.
மேலும், களியக்காவிளையில் இருந்து கேரள பகுதியான பாறசாலை வழியாக பனச்சமூடு, கொல்லங்கோடு போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த பஸ்கள் தமிழக பகுதி வழியாக மாற்றுப்பாதையில் இயங்கின. குறிப்பாக பனச்சமூடு செல்லும் பஸ்கள் மேக்கோடு வழியாகவும், கொல்லங்கோடு செல்லும் பஸ்கள் கோழிவிளை வழியாகவும் சென்றன.
இதுபோல், கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் களியக்காவிளை பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும். நேற்று முழு அடைப்பு காரணமாக கேரள பஸ்கள் எதுவும் களியக்காவிளைக்கு வரவில்லை. இதனால், களியக்காவிளை பஸ் நிலையத்தில் கேரள பஸ்கள் வந்து நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.
களியக்காவிளை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்கிறார்கள். இவர்கள் அதிகாலையில் பஸ்களில் செல்வது வழக்கம். முழு அடைப்பு காரணமாக பஸ்கள் ஓடாததால் கேரளாவுக்கு செல்ல வேண்டிய தொழிலாளர்களும், பயணிகளும் அவதியடைந்தனர். ஏராளமானோர் ரெயில்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றனர். இதனால், நேற்று கேரளாவுக்கு சென்ற ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.