8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-12-14 22:30 GMT
பனமரத்துப்பட்டி, 

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலம் அளவீடு செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், இந்த திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

சில விவசாயிகள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் டீசல் உள்ளிட்ட எரிபொருள் மிச்சமாகும், பயண தூரமும் குறையும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்றார்.

முதல்-அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் நேற்று சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டி பிரிவு என்ற இடத்தில் திடீரென ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் விவசாயிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் நேற்று முன்தினம் பேசும்போது, சர்வதேச தரத்தில் 8 வழிச்சாலை அமைக்கப்படும் என கூறியுள்ளது எங்களுக்கு பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகள் 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் தொடர்ந்து 8 வழிச்சாலை அமைக்கப்படும் என கூறி வருவது விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. எதற்காகவும் நாங்கள் எங்கள் நிலத்தை இழக்க தயாராக இல்லை. எப்போதும் 8 வழிச்சாலை வர அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், முதல்-அமைச்சரை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.

முன்னதாக உண்ணாவிரத போராட்டம் நடத்த தொழிலாளர்கள் பந்தல் அமைக்க முயன்றனர். அப்போது போலீசார், உரிய அனுமதி பெற்ற பின் தான் இங்கு பந்தல் அமைக்க வேண்டும், என்றதால் அவர்கள் திரும்பி சென்றனர். இதையடுத்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் இருந்து தார்ப்பாய் கொண்டு வந்து பந்தல் அமைத்து உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்