ஆட்டோ மீது பஸ் மோதல் : கைக்குழந்தையுடன் தாய் பலி - நெய்வேலியில் பரிதாபம்
நெய்வேலியில் ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் கைக்குழந்தையுடன், தாய் பலியானார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெய்வேலி,
நெய்வேலி கீழ்வடக்குத்தை சேர்ந்தவர் முகில்வண்ணன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சாந்தி (வயது20). இவர்களுக்கு ஒரு வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் முகில்வண்ணன் தனது குடும்பத்துடன் மாற்றுக்குடியிருப்பில் உள்ள தனது மாமியார் வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்தார். அதன்படி, நேற்று மாலை முகில்வண்ணன், தனது ஆட்டோவில் மனைவி மற்றும் கைக்குழந்தையை அழைத்துக்கொண்டு மாற்றுக்குடியிருப்பு நோக்கி புறப்பட்டார். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் டவுன்ஷிப் போலீஸ் நிலையம் அருகே முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முகில்வண்ணன் முந்திச்செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிரே விழுப்புரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி வந்த தனியார் பஸ், எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் சேதமடைந்து உருக்குலைந்தது. மேலும் விபத்தில் கைக்குழந்தை தீபிகா, சாந்தி ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலத்த காயமடைந்த முகில்வண்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முகில்வண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான கைக்குழந்தை மற்றும் சாந்தியின் உடலை கைப்பற்றிய டவுன்ஷிப் போலீசார், பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.