நாகையில் மீன்பிடி படகிற்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நாகையில், மீன்பிடி படகிற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-12-13 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை கடுவையாற்று பகுதியில் மீன்பிடி படகுகளுக்கான கட்டுமான தளம் அமைந்துள்ளது. இங்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய படகுகளை வடிவமைப்பது, பழைய படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படகு கட்டுமான தளத்தில் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான புதிய விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படகு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற மீனவர்கள் சிலர் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் படகில் பற்றிய தீயை அணைத்தனர்.

ஆனால் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகின் மேற்கூரை, படகில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்கள், ஐஸ் பெட்டி என அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

இதுகுறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், மீன்பிடி படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து படகிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படகிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்