ஆண்டிப்பட்டி அருகே: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கண்டமனூர்,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்டது அம்மாபட்டி கிராமம். இங்கு 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, தெப்பம்பட்டி அருகே ஆழ்துளை கிணறு அமைத்து கடந்த 20 ஆண்டுகளாக அங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது அந்த பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. அதன்படி கடந்த 10 தினங்களாக அம்மாபட்டி கிராம மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் செய்தும், ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ராஜதானி போலீஸ் நிலையம் அருகே ராஜதானி-தெப்பம்பட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தங்களது கிராமத்துக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எபி, முத்துப்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அம்மாபட்டி கிராமத்துக்கு தெப்பம்பட்டி அருகே இழந்தை குளம் பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.