கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் கையை பாட்டிலால் கிழித்துக்கொண்ட கைதியால் பரபரப்பு
கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் தனது கையை பாட்டிலால் கிழித்துக்கொண்ட கைதியால் பரபரப்பு நிலவியது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்த ஆழி பச்சேரியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 28). கூலி தொழிலாளி. இவர் அப்பகுதியில் காற்றாலைக்கு மின்கம்பங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 29-ந்தேதி பசுவந்தனையில் உள்ள தனியார் காற்றாலை நிறுவன அலுவலகத்துக்கு சென்று தகராறு செய்தார்.
இதுகுறித்து காற்றாலை நிறுவன மேலாளர் ஸ்ரீராம் அளித்த புகாரின்பேரில், பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை நேற்று காலையில் கைது செய்தனர். பின்னர் மதியம் அவரை கோவில்பட்டி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
அப்போது சதீஷ்குமார் சிறுநீர் கழித்து விட்டு வருவதாக, கோர்ட்டு வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். பின்னர் கழிப்பறை அருகில் உடைந்து கிடந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து அவர், தனது இடது கையில் கிழித்து கொண்டார். இதனால் அவரது கையில் ரத்தம் கொட்டியது.
உடனே அங்கிருந்து அவர் ரத்தம் சொட்ட சொட்ட ஓடி சென்று, 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தாவூது அம்மாள் முன்னிலையில் ஆஜராகி, தன்னை போலீசார் உடைந்த கண்ணாடி பாட்டிலால் கிழித்து கொடுமைப்படுத்தியதாக கூறினார். இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை எடுத்து கூறினர்.
உடனே அவருக்கு சிகிச்சை அளித்து, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி அவருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை போலீசார் மீண்டும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் 15 நாள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் கைதி பாட்டிலால் தனது கையை கிழித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.