வேலூர் விமான நிலையத்தில் தகவல் பரிமாற்ற மொபைல் சிக்னல் சோதனை ஓட்டம் ஐரோப்பிய வல்லுனர் குழுவினர் ஆய்வு

வேலூர் விமான நிலையத்தில் தகவல் பரிமாற்றத்திற்கான மொபைல் சிக்னல் சோதனை ஓட்டம் நடந்தது. இதனை ஐரோப்பிய வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2018-12-13 22:45 GMT
வேலூர், 

மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தின் கீழ் வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக ஓடுதளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 6 அடி உயரத்துக்கு மொரம்பு மண் கொட்டப்பட்டு, சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. ஓடுதளம் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

மேலும் பயணிகள் ஓய்வறை, கட்டுப்பாட்டு அறை, விமானிகள் தங்கும் அறைகள், வாகன நிறுத்துமிடம், உணவகம் உள்ளிட்டவைகள் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. விமான நிலையத்தில் ‘டெர்மினல்’ கட்டிடத்துக்கான பூமி பூஜை கடந்த மாதம் 28-ந் தேதி போடப்பட்டது. ஓடுதளம் அமைக்கும் பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள்ளும், விமான நிலைய அலுவலகம், தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை, பயணிகள் காத்திருப்பு அறைகள், உணவகம் உள்ளிட்டவற்றுக்கான கட்டிடங்கள் ஏப்ரல் மாதத்துக்குள்ளும் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து 19 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து தகவல் பரிமாற்றத்துக்காக மொபைல் சிக்னல் உபகரணங்கள் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மொபைல் சிக்னல் டவர் (மொபைல் ஏர் டிராபிக் கன்ட்ரோல் டவர்) அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் நேற்று மொபைல் சிக்னல் சோதனை ஓட்டம் நடந்தது. இதனை ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த சோதனை ஓட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. தொடர்ந்து ஐரோப்பிய வல்லுனர் குழுவினர் டெல்லியை சேர்ந்த விமானத்துறை அதிகாரிகள், தொழில்நுட்ப குழுவினருக்கு மொபைல் சிக்னலை பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘விமான நிலையத்தில் ஓடுதளம் அமைக்கும் பணி உள்பட அனைத்து பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது. இங்கிருந்து விமான சேவை தொடங்கும் போது மொபைல் சிக்னல் டவர் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர்.

மேலும் செய்திகள்