நலவாழ்வு முகாமுக்கு படவேடு கோவில் யானை லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது

தேக்கம்பட்டியில் நடைபெறும் நலவாழ்வு முகாமுக்கு படவேடு கோவில் யானை லட்சுமி லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Update: 2018-12-13 22:30 GMT
கண்ணமங்கலம்,

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் ஆண்டு தோறும் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெறும். இந்த முகாமுக்கு தமிழகத்தில் உள்ள கோவில்கள், மடங்களின் யானைகள் அனுப்பப்படும். அங்கு 48 நாட்கள் யானைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். மேலும் ஆரோக்கியம் குன்றிய யானைகளுக்கு சத்தான உணவுகளும், அதிக எடை கொண்ட யானைகளுக்கு எடை குறைக்க சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான நலவாழ்வு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு யோக ராமச்சந்திரமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான யானை லட்சுமி (வயது 23) கலந்துகொள்கிறது.

இதனையொட்டி யானை லட்சுமியை நேற்று அதிகாலை தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக யானை லட்சுமிக்கு கோவில் செயல் அதிகாரி கார்த்திகேயன், கண்காணிப்பாளர் விவேகானந்தன், கோவில் எழுத்தர் சீனிவாசன் ஆகியோர் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழி அனுப்பி வைத்தனர்.

யானையுடன் கால்நடை மருத்துவர், பாகன் ரங்கன், கோவில் எழுத்தர் ரவி மற்றும் குழுவினர் சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்