1,384 மகாடா வீடுகளுக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பம் 16-ந்தேதி குலுக்கல் நடக்கிறது

1,384 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் 16-ந்தேதி நடக்கிறது. இந்த வீடுகளை வாங்க 1 லட்சத்து 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

Update: 2018-12-13 00:24 GMT
மும்பை, 

மராட்டிய வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமான மகாடா பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முதல் உயர் வருமானம் கொண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

இந்த வீடுகள் தனியார் கட்டிடங்களை விட மலிவான விலைக்கு கிடைப்பதால் மகாடா வீடுகளுக்கு மவுசு அதிகம். தற்போது, மும்பையில் விற்பனை செய்வதற்காக 1,384 வீடுகளை மகாடா கட்டி உள்ளது.

இதில், 63 வீடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும், 926 வீடுகள் குறைவான வருமானம் கொண்டவர்களுக்கும், 201 வீடுகள் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும், 194 வீடுகள் உயர் வருமானம் கொண்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த வீடுகளுக்கான குலுக்கல் வரும் 16-ந்தேதி பாந்திராவில் உள்ள மகாடா தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த வீடுகளை வாங்குவதற்காக மும்பைவாசிகள் கடந்த மாதம் 4-ந் தேதி முதல் கடைசி நாளான நேற்றுமுன்தினம் வரை ஆன்-லைனில் விண்ணப்பித்தனர்.

இதில், மேற்படி 1,384 மகாடா வீடுகள் வாங்குவதற்காக மொத்தம் 1 லட்சத்து 97 ஆயிரத்து 183 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்