கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்: நெமிலி தாசில்தார் குடியிருப்பை திறக்காமல் சென்ற கலெக்டர் காத்திருந்த வருவாய்த்துறையினர் ஏமாற்றம்

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் காரணமாக நெமிலி தாசில்தார் குடியிருப்பை கலெக்டர் திறக்காமல் சென்று விட்டார். இதனால் காத்திருந்த வருவாய்த்துறை அலுவலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2018-12-12 21:45 GMT
பனப்பாக்கம், 

கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெமிலி தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி பனப்பாக்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ரகு தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்தார். பனப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் வரவேற்றார். இதில் வட்டத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் ராமு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதன்அருகே நெமிலி தாசில்தார் குடியிருப்பு ரூ.22 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு, இதன் திறப்பு விழா நேற்று நடைபெற இருந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ராமன் திறந்து வைப்பதாக இருந்தது. இதனிடையே நேற்று நடந்த நெமிலி தாலுகா அலுவலக திறப்பு விழாவில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டார்.

அந்த விழாவை முடித்து விட்டு, பனப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே புதிதாக கட்டப்பட்ட நெமிலி தாசில்தார் குடியிருப்பை திறந்து வைக்க வருவார் என வருவாய்த்துறை அதிகாரிகள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், கலெக்டர் ராமன் நெமிலி தாசில்தார் குடியிருப்பு விழாவுக்கு வராமல் வேலூர் சென்று விட்டார். இதனால் மதியம் 1 மணி வரை தாசில்தார் குடியிருப்பு திறக்கப்படாமல் ரிப்பன் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அதன் பின்னர் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளரை தாசில்தார் குடியிருப்பை திறந்து வைக்க அதிகாரிகள் கூறினர்.

இதனை தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் வனிதா, நெமிலி தாசில்தார் குடியிருப்பை திறந்து வைத்துபொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பனப்பாக்கத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தால் தாசில்தார் குடியிருப்பை கலெக்டர் திறந்து வைக்காமல் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்