துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருப்பு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி தகவல்
துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மனிதகழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்திட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதுதவிர கிராம மற்றும் நகர்ப்புறங்களில் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் குடியிருப்புகள், முறையான மருத்துவ சிகிச்சை, தொழிலாளர்களின் குழந்தைகள் மேற்படிப்புக்கு கடன் உதவிகள், தொழில்கடன் உதவிகள், அரசு விதிமுறைப்படி முறையான ஊதியம் போன்றவற்றை வழங்கிட பிரதமர் உத்தரவின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் அனைத்துத்துறைகளும் முன்னேறி வருகிறது. அதன்படி, நாட்டின் தூய்மையை காக்கும் பணியை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களுக்கும் 100 சதவீதம் இந்த திட்டங்கள் அனைத்தும் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.
விரைவில் துப்புரவு பணியாளர்களுக்கும் அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து முறையான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும். துப்புரவு தொழிலாளர்களின் தலைமுறை வளர அரசு சார்பில் தாட்கோ மூலம் ரூ.25ஆயிரம் முதல் ரூ.25லட்சம் வரை தொழில், கல்விக்கடன் உதவிகள் வட்டியில்லாமல் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையான வீடுகள் வழங்கிடவும், வீடுகள் கட்டவும் நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இடங்கள் இல்லை என்றால் வருவாய்த்துறையிடம் கேட்டுப்பெற்று, குடிசைமாற்று வாரிய குடியிருப்பு திட்டத்தில் அதனை செயல்படுத்திட வேண்டும். நிரந்தர, தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு அரசு விதிமுறைப்படி, குறைந்தபட்ச ஊதியம் முறையாகவும், கண்டிப்பாகவும் வழங்கிடவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இதுபோன்ற ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் துப்புரவு பணியாளர்களுக்கான தேவைகள், உதவிகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு, வருகிற ஜனவரி மாதத்தில் தமிழக அரசிடம் அளிக்கப்படும். துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். முதல்- அமைச்சரை நேரில் சந்தித்து துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைளை தெரிவிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து அவர் பணிகாலத்தில் இறந்த துப்புரவு பணியாளர்களின் குடும்பதாரர்களுக்கு ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 74 மதிப்பிலான சேமநலநிதி மற்றும் ஈட்டிய விடுப்பு தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம், வீடு வசதி, மருத்துவ வசதிகள், பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி, தாட்கோ கடன் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் உஷா, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன் மற்றும் நகராட்சிகளின் ஆணையாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.