போதிய விலை கிடைக்காததால்: ஊட்டியில் ஏர் உழுது உருளைக்கிழங்கு அறுவடை

போதிய விலை கிடைக்காததால் ஊட்டியில் ஏர் உழுது உருளைக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டது.

Update: 2018-12-12 22:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. இங்கு கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காளிப்பிளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி போன்ற மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த காய்கறிகள் மலைப்பிரதேசத்தில் நல்ல விளைச்சலை தருவதால், அதனை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மலைச்சரிவுகளில் காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், அதனை பராமரித்து வளர்த்து அறுவடை செய்ய விவசாயிகள் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சில நேரங்களில் மலைக்காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால், செலவழித்த தொகையை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். இந்த நிலையில் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.

தற்போது உருளைக்கிழங்கு சாகுபடிக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து, பராமரிப்பு போன்றவற்றுக்கு செலவு அதிகமாக ஆகிறது. மேலும் பெண் தொழிலாளர்களுக்கு ரூ.300-ம், ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.500-ம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஒரு பயிரை விளைய வைத்து அறுவடை செய்ய அதிக செலவு ஆகிறது.

இந்த நிலையில் தற்போது மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு பெங்களூரு ஆசன், ஒடிசா உள்ளிட்ட இடங்களில் இருந்து உருளைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் ஊட்டி உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 45 கிலோ உருளைக்கிழங்கு (ஒரு மூட்டை) ரூ.ஆயிரத்து 100-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.600 முதல் ரூ.650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் காரணமாக விவசாயிகள் பயிருக்கு போட்ட பணத்தை எடுக்க முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்து கவலையில் உள்ளனர்.

உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி காரணமாக, ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் ஒரு விளைநிலத்தில் தொழிலாளர்களுக்கு பதிலாக காளை மாடுகளை பூட்டி ஏர் உழுது உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் பணி நேற்று நடைபெற்றது. சமவெளியில் மாடுகளை கொண்டு நிலத்தில் ஏர் உழுதல் எளிதானது. ஆனால், மலைச்சரிவுகளில் ஏர் உழுது அறுவடை செய்வது என்பது சவாலான விஷயம் ஆகும்.

ஒரு முறை உழுதவுடன், மண்ணுக்குள் இருந்து உருளைக்கிழங்கு மேற்பகுதிக்கு வந்தது. இதனை தொழிலாளர்கள் சேகரித்து கூடையில் நிரப்பினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஊட்டி உருளைக்கிழங்குக்கு என்று தனி மவுசு உள்ளது. மருத்துவத்துக்கு பயன்படும் ஓட்கா உருளைக்கிழங்கில் இருந்து தயாரிக்கலாம். ஊட்டி உருளைக்கிழங்கு தனிச்சுவை உள்ளது. தற்போது விலை வீழ்ச்சியால், தொழிலாளர்களுக்கு கூலி, உரம், மருந்துகள், பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. முன்பு அதிக தொழிலாளர்களை கொண்டு கொத்து போட்டு உருளைக்கிழங்கை அறுவடை செய்து வந்தோம். தொழிலாளர்களுக்கு கூலி தொகை அதிகமாக உள்ளதால், காளை மாடுகளை பூட்டி ஏர் உழுது அறுவடை செய்து வருகிறோம். இதனால் கால விரயம் தவிர்க்கப்படு கிறது.

அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு லாரி மூலம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு வெளியிடங்களில் இருந்தும் உருளைக்கிழங்கு வருவதால், ஊட்டி உருளைக்கிழங்குக்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. விலை வீழ்ச்சி காரணமாக சில விவசாயிகள் அறுவடை செய்யாமல் உள்ளனர். வருங்காலத்தில் ஊட்டி உருளைக்கிழங்குக்கு விலை உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்