காரிமங்கலம் அருகே பரபரப்பு: 3 வயது குழந்தையை மொபட்டில் கடத்திய ஆசாமி பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்

காரிமங்கலம் அருகே 3 வயது குழந்தையை மொபட்டில் கடத்தி சென்ற ஆசாமியை பொதுமக்கள் விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-12-12 23:15 GMT
காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பூமாண்டஅள்ளி ஊராட்சி ஒட்டர் பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுமித்ரா (21). இவர் களுக்கு கோகிலா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று காலை 10 மணி யளவில் சுமித்ரா தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். இதை பார்த்த சுமித்ராவின் மகள் கோகிலா தனது தாயின் பின்னால் நடந்து வந்தாள்.

அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஆசாமி கோகிலாவை தனது மொபட்டில் தூக்கி வைத்து கொண்டு கண் இமைக்கும் நேரத்்தில் கடத்தி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சுமித்ரா தனது மகளை யாரோ கடத்தி செல்வதாக கூச்சலிட்டுள்ளார்.

இதைகேட்டதும் ஒட்டர் பாளையத்தில் பொதுமக்கள் திரண்டனர். குழந்தையை கடத்தி சென்ற அந்த ஆசாமியை விரட்டிச்சென்றனர். பின்னர் பொதுமக்கள் அவரை மேக்கனாம்பட்டியில் மொபட்டுடன் பிடித்து விசாரித்்தனர். அவன் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரிடம் இருந்த மொபட்டை சோதனையிட்டனர். அப்போது அது தர்மபுரியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமான மொபட் என்பதும் அந்த ஆசாமி அதை திருடி வந்திருப்பதும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை காரிமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பாலனப்பட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்ற முருகன் (39) என தெரிய வந்தது. 3 வயது குழந்தையை எதற்காக கடத்தி சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்