கடலில் வீணாக கரைக்கப்படும் நிலக்கரி சாம்பலை செங்கல் தயாரிப்புக்கு வழங்க வேண்டும் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை
கடலில் வீணாக கரைக்கப்படும் நிலக்கரி சாம்பலை செங்கல் தயாரிப்புக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தூத்துக்குடி,
கடலில் வீணாக கரைக்கப்படும் நிலக்கரி சாம்பலை செங்கல் தயாரிப்புக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு மாநில தலைவர் கஜேந்திரன், மாவட்ட தலைவர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் சசிதரன், பொருளாளர் அருள்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இலவசமாக...
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையங்களில் இருந்து உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு 20 சதவீதம் சாம்பல் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் சிமெண்டு ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்யதுள்ள அளவில் இருந்து அதிகமாக சாம்பல் வழங்கப்படுகிறது. உலர் சாம்பல் செங்கல் உற்பத்திக்கு 5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
வீணாக கடலில் கரைப்பு
மேலும் சிமெண்டு ஆலைகள் எடுத்து செல்லாத உலர் சாம்பல் அனைத்தும், அனல் மின் நிலையத்தில் இருந்து வீணாக கடலில் கொட்டி கலக்கப்படுகிறது. இதனை வெளியே எடுத்து சென்று கடல் பகுதிகளில் கரைப்பதற்காக டன் ஒன்றுக்கு ரூ.340 வரை செலவாகிறது. எனவே இதனை கடலில் வீணாக கரைக்காமல், உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கவேண்டும்.
உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளான இந்த நிலக்கரி சாம்பலை குறைவாக வழங்குவதால் உற்பத்தி செலவு அதிகரித்து, சாம்பல் செங்கலின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சாம்பல் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு 3½ லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
செங்கல் தயாரிப்புக்கு...
அரசு மற்றும் பொதுப்பணித்துறை கட்டுமானங்களுக்கு சுற்றுப்புற சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் விதமாக சாம்பல் செங்கல்களையே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவும் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. இதனால் நிலக்கரி சாம்பல்களை உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் தொழிலுக்கு முன்னுரிமை அளித்து வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.