தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மாநகராட்சி கமி‌ஷனர் பேச்சு

சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வேலூர் மாநகராட்சி கமி‌ஷனர் கூறினார்.

Update: 2018-12-12 22:30 GMT

வேலூர், 

வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர நகர்நல அலுவலர் மணிவண்ணன், உதவிகமி‌ஷனர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2–வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:–

வேலூர் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து தேவாலய போதகர்கள், மசூதி நிர்வாகிகள், கோவில் ஊழியர்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தேவாலயம், மசூதி, கோவிலுக்கு வருபவர்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாணவர்களிடம் ஒரு வி‌ஷயத்தை தெரிவித்தால், அது அனைவரிடமும் எளிதில் சென்றடையும். மாணவர்கள் தங்கள் டைரி அல்லது வீட்டு பாடக்குறிப்பு நோட்டில் தங்கள் வீடுகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைப்போம், வீடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்போம், கைகளை கழுவி சுத்தமாக இருப்போம், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் என்று எழுதி அதனை தங்களது பெற்றோருடன் கையெழுத்து பெற வேண்டும்.

பின்னர் அதனை வகுப்பாசிரியர்களிடம் காண்பிக்க வேண்டும். வீட்டின் அவை செயல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் வேலூரை தூய்மையான மாநகராட்சியாக மாற்றாலம். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாநகராட்சியில் உள்ள 222 பள்ளிகளிலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்பணியில் சுகாதார அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், ‘தூய்மை இந்தியா’ பரப்புரையாளர்கள் ஈடுபடுவார்கள். வேலூர் மாநகராட்சியில் தற்போது 60 சதவீத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. விரையில் 100 சதவீதம் குப்பைகள் தரம் பிரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், சுகாதார அலுவலர்கள் முருகன், பாலமுருகன், சிவக்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள், ‘தூய்மை இந்தியா’ பரப்புரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்