தூத்துக்குடியில் இருந்து மலேசியா, சீனாவுக்கு நேரடி சரக்கு போக்குவரத்து சேவை மத்திய மந்திரி நிதின் கட்கரி கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் இருந்து மலேசியா, சீனாவுக்கு நேரடி சரக்கு போக்குவரத்து சேவையை மத்திய மந்திரி நிதின் கட்கரி கானொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து மலேசியா, சீனாவுக்கு நேரடி சரக்கு போக்குவரத்து சேவையை மத்திய மந்திரி நிதின் கட்கரி கானொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சரக்கு பெட்டக கப்பல்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் மிதவை ஆழம் 14 மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து முக்கிய வழித்தடத்தில் செல்லும் பெரிய சரக்கு கப்பல்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்பு தூத்துக்குடியில் இருந்து செல்லும் சரக்கு பெட்டகங்கள் சிறிய கப்பல்கள் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் செலவு மற்றும் காலவிரையம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டதால், 4 ஆயிரத்து 333 சரக்கு பெட்டகங்களை ஏற்றி செல்லக்கூடிய முக்கிய வழித்தடத்தில் செல்லும் பிரமாண்ட சரக்கு கப்பல் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. வான்ஹாய் 510 என்ற இந்த கப்பல் 268.8 மீட்டர் நீளம், 32.30 மீட்டர் அகலம் கொண்டது.
‘சீனா இந்தியா 2‘ என்று அழைக்கப்படும் இந்த சேவையில் 6 கப்பல்கள் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மலேசியா நாட்டில் உள்ள பீனாங் துறைமுகம், போர்ட் கிளாங் துறைமுகம் வழியாக சீனாவில் உள்ள ஹாங்காங், கீயூன் டாவ், சாங்காய், நிங்போ, சிக்கோ ஆகிய துறைமுகங்களுக்கு செல்கிறது. பின்னர் மீண்டும் மும்பை நவசேவா துறைமுகத்துக்கு வருகிறது. அங்கிருந்து தூத்துக்குடிக்கு வருகிறது.
கப்பலுக்கு வரவேற்பு
இந்த கப்பல் நேற்று முதல் முறையாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. கப்பலுக்கு வரவேற்பு மற்றும் சீனா, மலேசியா நாடுகளுக்கு நேரடி சரக்கு போக்குவரத்து சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று துறைமுக 8–வது கப்பல் தளத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ்ராய், துணைத்தலைவர் வையாபுரி, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாக்பூரில் இருந்து சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, கப்பல் துறை, நீர்வளங்கள் மற்றும் நதி வளர்ச்சி, கங்கை புத்துணர்வு மந்திரி நிதின் கட்கரியும், சென்னையில் இருந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் இருந்து மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை மந்திரி மன்சுகி மண்டவியா ஆகியோர் நேரடி சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து பிரமாண்ட சரக்குபெட்டக கப்பலில் இருந்து சரக்கு பெட்டகங்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது:–
சரக்கு பெட்டக முனையம்
அனைத்து துறைமுகங்களின் திறன் மேம்பாடு, கொள்ளளவை அதிகரித்தல், தடைகளை களைதல், பரிவர்த்தனை கட்டணத்தை குறைத்தல் என்ற வகையில் மத்திய கப்பல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு போக்குவரத்து சேவை தென்னிந்தியாவின் சரக்கு கையாளும் வர்த்தகத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும். ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒரு சரக்குபெட்டகத்துக்கு 50 அமெரிக்க டாலர்கள் வரை செலவு குறையும். இத்தகைய முக்கிய வழித்தட சரக்கு பெட்டக கப்பல் வருகையால், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வருங்காலத்தில் முழு திறன் கொண்ட சரக்குபெட்டக மாற்று முனையமாக திகழும்.
கடந்த 4 ஆண்டுகளில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி பெரிய தொழில்நகரமாக உருவாகும் திறன் பெற்றது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், 1000 ஏக்கரில் துறைமுகம் சார்ந்த தொழில் மேம்பாட்டு மண்டலம் அமைக்கப்படும். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்து வருகிறது. இதுவரை நிலக்கரி கையாளுவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது பெரிய கப்பல்கள் வந்து இருப்பதன் மூலம் மற்ற சரக்கு பெட்டக வர்த்தகமும் அதிகரிக்கும். விரைவில் துறைமுகத்தின் மிதவை ஆழம் 16.5 மீட்டராக அதிகரிக்கப்படும். இதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் தென்னிந்தியாவில் ஒரு சரக்குபெட்டக பரிவர்த்தனை முனையமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்–அமைச்சர் பழனிசாமி
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,‘ தூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள் மூலம் மலேசியா போன்ற நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு இருப்பது வரலாற்று சாதனை. இந்த சேவை தமிழகத்தின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை ஊக்கவிப்பது மட்டுமல்லாமல், தென்தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்’ என்று கூறினார்.
மத்திய கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, ‘1974–ம் ஆண்டு முதல் இன்று வரை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பெரும் வளர்ச்சி கண்டு உள்ளது. சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் சிறந்து திகழ்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் தொடங்கப்பட்ட இந்த சேவை மூலம் சரக்குபெட்டகங்களின் போக்குவரத்து கொழும்பு துறைமுக இணைப்பு இல்லாமல் தூர கிழக்கு நாடுகளுக்கு நேரடியாக கொண்டு செல்ல முடியும்’ என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கப்பல் ஏற்றுமதி முகவர்கள் சங்க தலைவர் ஆனந்த் மொராயிஸ், ஜோ வில்லவராயர், வணிக இயக்குனர் வெர்பிகே கோயன், தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் மற்றும் துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சரக்கு பெட்டக முனைய தலைமை நிர்வாக அதிகாரி எரிக்லெவனு நன்றி கூறினார்.