வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை - சட்டசபையில் எடியூரப்பா குற்றச்சாட்டு

வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2018-12-11 22:34 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை நேற்று காலை கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எழுந்து, வறட்சி குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குமாறு கோரினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் வாக்குறுதிகளை பார்த்து மக்கள் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கவில்லை. வெறும் 36 தொகுதிகளில் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்.

உங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சியினர், கையை கட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை.

100-க்கும் அதிகமான தாலுகாக்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மேலும் 25 தாலுகாக்கள் வரை வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது. கர்நாடகத்தில் இயல்பை விட 72 சதவீதம் வரை மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

வறட்சி பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் யாரும் நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை. வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. மாவட்ட கலெக்டர்கள் வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தவில்லை.

வறட்சி பாதித்த பகுதிகளில் தாலுகாக்களுக்கு தலா ரூ.50 லட்சத்தை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி போதாது. இது ஏற்கனவே உள்ள நிலுவைத்தொகைகளுக்கு பட்டுவாடா செய்யப்படும்.

வறட்சி பாதித்த பகுதிகளில் சரியான நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது. சமூக நலத்திட்டத்தில் மாத உதவித்தொகையை உயர்த்துவதாக இந்த அரசு கூறியது. ஆனால் அந்த உதவித்தொகையை உயர்த்தவில்லை.

விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக ஜனதா தளம்(எஸ்) கூறியது. அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பயிர் சேதத்திற்கு நிவாரணம் வழங்குவதாக உறுதி அளிக்கப் பட்டது. அதை வழங்கவில்லை.

பள்ளி குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதாக சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ெபாய் வாக்குறுதிகளை வழங்கி மக்களின் ஆதரவை பெற்றனர். ஆனால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அடுத்த 4½ ஆண்டுகளில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக இந்த அரசு சொல்கிறது. அதுவரை யார் இருக்கிறார்களோ, இல்லையோ யாருக்கு தெரியும். விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர்.

வங்கிகள் புதிய விவசாய கடனை வழங்கவில்லை. விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாய கடனை தள்ளுபடி செய்ய தேசிய வங்கிகள் ஒப்புக்கொண்டதா?.

இந்த அரசு, விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது. விவசாய கடனை தள்ளுபடி செய்தால் அதை நான் வரவேற்கிறேன். தேசிய வங்கி விவசாய கடனை தள்ளுபடி செய்வதில் மாநில அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி நடத்துவதை காங்கிரஸ் எப்படி சகித்துக்கொண்டு இருக்கிறது?. பொதுப்பணித்துறையில் மாதந்தோறும் பணம் வசூலிக்கப்படுகிறது.

அனைத்து மந்திரிகளுக்கும் நட்சத்திர ஓட்டலிலேயே அறை ஒதுக்கி கொடுத்துவிடுங்கள். முதல்-மந்திரி குமாரசாமி, ஒரு நட்சத்திர ஓட்டலில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளார். அதற்கு கோடிக்கணக்கான ரூபாய் வாடகை செலுத்தப்படுகிறது. அந்த பணம் யாருடையது?. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

எடியூரப்பா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் நிராகரித்துவிட்டார்.

மேலும் செய்திகள்