கைதிகளின் உறவினர்கள் நாராயணசாமியை முற்றுகை; பரோல் வழங்காத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
முதல்–அமைச்சர் நாராயணசாமியை முற்றுகையிட்ட கைதிகளின் உறவினர்கள் பரோல் வழங்காத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.
புதுச்சேரி,
புதுவை சிறைகளில் உள்ள தண்டனை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் பரோல் வழங்குவதில்லை என்று கைதிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அவர்கள் கடந்த சில நாட்களாக பரோல் வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் 20–க்கும் மேற்பட்ட கைதிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சிறைக்கு திரும்பினார்கள். இந்தநிலையில் மேலும் 9 கைதிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் நேற்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கவர்னர் மாளிகை அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். அவர் மாலை அணிவித்துவிட்டு புறப்படும் நேரத்தில் அங்கு கூடியிருந்த கைதிகளின் உறவினர்கள் அவரை முற்றுகையிட்டனர்.
சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளிடம் மனிததன்மையற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டினார்கள். கைதிகளின் பெற்றோர், குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால்கூட அவர்களை பார்க்க பரோலில் அனுமதிக்க மறுப்பதாக புகார் தெரிவித்தனர். சிறைத்துறை அதிகாரிகளுக்குள் ஏற்பட்டுள்ள ஈகோ பிரச்சினையினால் கைதிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
அவர்களது கருத்துக்களை கேட்டுக்கொண்ட முதல்–அமைச்சர் நாராயணசாமி, இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது கவர்னர் கிரண்பெடியும் வெளியில் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரை சந்தித்தும் புகார் தெரிவிக்க கைதிகளின் உறவினர்கள் அங்கு கூடிநின்றனர். ஆனால் அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.