தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணம் - போலீஸ் விசாரணை

சேத்துப்பட்டு அருகே தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

Update: 2018-12-11 21:45 GMT
சேத்துப்பட்டு, 

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 55). இவர் சென்னையில் முடிதிருத்தும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் பாண்டியன் (34), தேவிகாபுரத்தில் வசித்து வருகிறார். முனியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகன் பாண்டியன் வீட்டிற்கு வந்தார். கடந்த 9-ந் தேதியன்று சென்னை சென்று வருவதாக கூறி விட்டு மகன் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

இந்த நிலையில் தேவிகாபுரத்திலிருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ள தேவர் அடியார்கள் குளம் அருகே முனியன் இரும்பு குழாயில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவில் மர்மம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கலசபாக்கத்தை அடுத்த காந்தபாளையம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் அருகில் 60 வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் மழையூரைச் சேர்ந்த வீரராகவன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணத்திற்கு வீரராகவன் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை வீரராகவன் தாக்கி உள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரராகவனை கைது செய்தனர். இந்த வழக்கு வந்தவாசியில் உள்ள மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு அட்டவணையில் இல்லாத நிலையில் அங்கு சென்ற அந்த பெண் தனக்கு நீதி வழங்கக்கோரி ரகளையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மகளிர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

* தண்டராம்பட்டு தாலுகா மேல்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (23), டிரைவர். இவர் கார் கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு கொண்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுரேசை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து சாத்தனூர் அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திருவண்ணாமலை டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்டராம்பட்டு சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சமுத்திரம் காலனியை சேர்ந்த சுஜி (35) என்பதும், கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சாராய வியாபாரத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலை சமுத்திரம் காலனியை சேர்ந்த செல்வி (67) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்