திண்டிவனம் அருகே: பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி

திண்டிவனம் அருகே பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.

Update: 2018-12-11 22:00 GMT
பிரம்மதேசம், 

தூத்துக்குடி மாவட்டம் கலைவாணி நகரை சேர்ந்த வர் முத்தையாபிள்ளை மகன் பாலசுப்பிரமணியன்(வயது 34). இவரது மனைவி முருகேஸ்வரி(34). இவர்களுக்கு வீரமணி(4) என்கிற மகனும், வீரஜெசி(2) என்ற மகளும் உள்ளனர். பாலசுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருந்தார். திண்டிவனத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த அவர், தினசரி போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவார்.

இந்த நிலையில் பிரம்மதேசம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை விற்பனையாளர்கள் திண்டிவனத்திற்கு எடுத்து செல்லும் போது திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதை தடுக்கும் வகையில் பிரம்மதேசம் போலீசார் பாதுகாப்புக்காக அவர்களுடன் செல்வார்கள்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு பணத்தை எடுத்து சென்ற டாஸ்மாக் விற்பனையாளர்களுடன் பாலசுப்பிரமணியன் பாதுகாப்புகாக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர்களை திண்டிவனம் பகுதியில் விட்டுவிட்டு, மீண்டும் பிரம்மதேசம் நோக்கி அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, மானூர் அருகே வந்த போது எதிரே வந்த ஒரு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய பாலசுப்பிரமணியன் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடன் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் வந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்