பிசான சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
அம்பை,
பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக டிசம்பர் மாதம் 11–ந்தேதி (நேற்று) முதல் 111 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அம்பை தாசில்தார் ராஜேஸ்வரி, பொதுப்பணித்துறை என்ஜினீயர் சொர்ணகுமார், உதவி என்ஜினீயர்கள் சிவகுமார், பழனிவேல், வேளாண்மை கோட்ட இயக்குனர் பழனி வேலாயுதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
12 ஆயிரம் ஏக்கர்
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மணிமுத்தாறு அணையில் இருந்து 3–வது, 4–வது ரீச்சுகளில் 445 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன்மூலம் ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அணையில் இருந்து வருகிற மார்ச் மாதம் 31–ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர்மட்டம் 107.15 அடியாக உள்ளது. அணைக்கு 209 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.