ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக சமூக வலைதள தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் வக்கீல்கள் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக சமூக வலைதள தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று வக்கீல்கள் கூறினர்.

Update: 2018-12-11 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக சமூக வலைதள தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று வக்கீல்கள் கூறினர்.

தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல்கள் மணிகண்டன், கணேசன் மற்றும் வக்கீல்கள் குழுவினர் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

சமூக வலைதளங்கள் 

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22–ந் தேதி நடந்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். இந்தநிலையில் சில பொய் போராளிகள் சமூக வலைதளங்களில் போராட்டம் தொடர்பாக பதிவிடுகிறார்கள். இதனால் தூத்துக்குடி மக்களிடையே பீதிதான் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் மக்கள் இதுபோன்ற பதிவுகளை, வதந்திகளை நம்ப வேண்டாம். நீதித்துறையை நாடுங்கள். இதுவரை நடுநிலையாகத்தான் இருக்கிறது. இனிமேலும் நடுநிலையாகத்தான் இருக்க போகிறது. நாங்கள் நீதித்துறையை நம்புகிறோம், நீதியரசர்களை நம்புகிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஏற்போம். பாதகமாக வந்தால் மேல்முறையீடு செய்வோம். தற்போது தூத்துக்குடியில் பதற்றமாக உள்ளது. மே 22 சம்பவம் போன்று இனிமேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்காமல் இருப்பதற்கு பொய் போராளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிர் நீத்தாவது நீதி வாங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இப்படி கூறியதால்தான் 13 பேர் உயிர் இழந்து உள்ளனர். உயிரை கொடுத்துதான் நீதி வாங்க வேண்டும் என்று இல்லை. நீதி என்றுமே நடுநிலையாக செயல்படுகிறது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். நீதித்துறையை நம்பி இருக்கிறோம். சமுக வலைதளங்களில் வதந்திகளை பரப்புகிறவர்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதல்–அமைச்சர், கலெக்டர், நீதியரசர்களிடமும் மனு கொடுக்க உள்ளோம்.

விழிப்புணர்வு 

ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவர் உரிமை. ஆனால் ஒரு பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சென்று போராட செய்கின்றனர். இதனால் மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. போலி போராளிகள் யார் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் அந்த விவரங்கள் வெளியிடப்படும். தூத்துக்குடியை சேர்ந்தவர்களே தூத்துக்குடி மக்களை பாதிப்படைய செய்கிறார்கள். போலிப் போராளிகள் யாராக இருந்தாலும், களையெடுக்கப்பட வேண்டும். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களின் உறவினர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சேகரிக்க உள்ளோம். சமூக வலைதளங்களில் பீதியை உருவாக்கும் வகையில் பதிவிடுபவர்கள் குறித்தும் புகார் தெரிவிக்க உள்ளோம். ஒவ்வொரு கிராம மக்களையும் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்