நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 இடங்களில் இரும்பு கடைகளில் திடீர் சோதனை; ரூ.3¼ கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு ஜி.எஸ்.டி. அதிகாரி தகவல்

நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 இடங்களில் உள்ள இரும்பு கடைகளில் நடந்த திடீர் சோதனையில் ரூ.3¼ கோடி வரி ஏய்ப்பு நடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஜி.எஸ்.டி. அதிகாரி தெரிவித்தார்.

Update: 2018-12-11 21:45 GMT
நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 இடங்களில் உள்ள இரும்பு கடைகளில் நடந்த திடீர் சோதனையில் ரூ.3¼ கோடி வரி ஏய்ப்பு நடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஜி.எஸ்.டி. அதிகாரி தெரிவித்தார்.

திடீர் சோதனை 

மதுரை மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை (ஜி.எஸ்.டி.) ஆணையாளர் சரவணக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக வணிகர்கள் தாக்கல் செய்துள்ள படிவங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோரில் சிலர் உள்ளீட்டு வரியை உபயோகித்து வரி செலுத்தியது தெரியவந்தது. மேலும் அவர்கள் மிக குறைவான தொகையை மட்டுமே ரொக்கமாக செலுத்துவதாகவும், விற்பனை குறித்த விவரங்கள், வேண்டுமென்றே மிக குறைவாக காட்டப்படுவதாகவும் மதுரை மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் மற்றும் மதுரை உள்ளிட்ட 11 இடங்களில் அமைந்துள்ள தனியார் இரும்பு விற்பனை நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அங்குள்ள சரக்கு கணக்குகளோடு ஒப்பிட்டு பார்த்தபோது விற்பனை மிக அதிகமாக இருப்பதையும், கணக்கில் முறைகேடு செய்திருந்த ஆவணங்களையும் கைப்பற்றினர்.

ரூ.3¼ கோடி வரி ஏய்ப்பு 

இந்த சோதனையில் கணக்கில் வராத சரக்குகளை கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய மற்றும் மாநில சரக்கு சேவை வரி சட்டத்தின் கீழ் ரூ.3.25 கோடி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை வசம் மிக அதிகமாக, முறைகேடான உள்ளீட்டு வரி உபயோகிப்போர் குறித்த விவரங்கள் இருக்கிறது. வருங்காலத்தில் வரி ஏய்ப்போர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சோதனை நடவடிக்கைகள் மற்றும் இ–வே பில் சம்பந்தமான சோதனைகளும் கடுமையாக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்