டாக்டர் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; போலி உதவி கலெக்டர் உட்பட 21 பேர் மீது வழக்கு

டாக்டர் மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக போலி உதவி கலெக்டர் உள்பட 21 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-12-10 23:30 GMT

விருதுநகர்,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தனுஷ்கோடிபுரத்தை சேர்ந்தவர் எஸ்.பி.மூர்த்தி (வயது 53). ஹோமியோபதி டாக்டரான இவருக்கு முகநூல் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சிவசுப்பிரமணியம், தான் திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சி உதவி கலெக்டராக பணியாற்றி வருவதாக அறிமுகம் செய்துகொண்டார். இருவரிடையே பழக்கம் அதிகமானதன் பேரில் டாக்டர் மூர்த்தி தனது மனைவி முத்துலெட்சுமி கம்ப்யூட்டர் படித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை வாங்கித்தரவேண்டும் என்றும் சிவசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளார்.

சிவசுப்பிரமணியம் வருவாய் துறையில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை வாங்கித்தர ரூ.10 லட்சம் தேவைப்படும் என கூறிய நிலையில் டாக்டர் மூர்த்தி கடந்த பிப்ரவரி மாதம் 3–ந்தேதி சிவசுப்பிரமணியத்திடம் ரூ.3 லட்சம் முதல் தவணையாக கொடுத்துள்ளார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 15–ந்தேதி டாக்டர் மூர்த்தி மம்சாபுரத்திலுள்ள சிவசுப்பிரமணியத்தின் வீட்டிற்கு சென்று ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். அப்போது சிவசுப்பிரமணியம் தனது தந்தை சேதுராமன் செங்கல் சூளை நடத்திவருவதாகவும் மற்றும் தனது தாயார் ராமலெட்சுமி, சகோதரி சோபனா, மற்றும் உறவினர்கள் குருசாமி, வீரமணி, கோபால் ஆகியோரை டாக்டர் மூர்த்திக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மேலும் சிவசுப்பிரமணியத்தின் மற்றொரு சகோதரி சுகன்யாவும், அவரது கணவர் கார்த்திகேயனும் துபாயில் இருந்து டாக்டர் மூர்த்தியிடம் செல்போனில் பேசியுள்ளனர். இவர்கள் அனைவருமே டாக்டர் மூர்த்தியிடம் சிவசுப்பிரமணியம் பயிற்சி உதவி கலெக்டராக இருப்பதாகவும் அவர் உங்கள் மனைவிக்கு வேலை வாங்கி கொடுத்துவிடுவார் என்றும் உறுதி கூறியுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த மே மாதம் சிவசுப்பிரமணியம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் போலி உதவி கலெக்டர் என கூறி மோசடி செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் அவரை கைது செய்துள்ள செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததை பார்த்து டாக்டர் மூர்த்தி அதிர்ச்சியடைந்தார். வேலை வாங்கித்தருவதாக கூறி சிவசுப்பிரமணியம் மோசடி செய்துள்ளது தெரியவந்த டாக்டர் மூர்த்தி மம்சாபுரம் சென்று சிவசுப்பிரமணியத்தின் தந்தை சேதுராமனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். மூர்த்தி கொடுத்த ரூ.10 லட்சத்திற்கு சிவசுப்பிரமணியத்தின் தந்தை சேதுராமன் கையெழுத்திட்டு ஒரு ரசீதும் கொடுத்துள்ளார். ஆனாலும் பணத்தை தர மறுத்ததோடு சிவசுப்பிரமணியமும் அவரது தந்தை சேதுராமனும் மற்றும் உறவினர்கள் 12 பேரும் மூர்த்தியை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டாக்டர் மூர்த்தி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் போலி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியம், அவரது பெற்றோர் சேதுராமன், ராமலெட்சுமி, சகோதரிகள் சுகன்யா, சோபனா, சுகன்யாவின் கணவர் கார்த்திகேயன், உறவினர்கள் வீரமணி, கோபால், குருசாமி, குருசாமியின் மகன்கள் 2 பேர், மேலும் 10 உறவினர்கள் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்