ஓமலூரில் வாகன சோதனையின் போது சரக்கு வேன் விபத்தில் சிக்கியது அலுவலர்களுடன், டிரைவர் வாக்குவாதம்

ஓமலூரில் ஜி.எஸ்.டி. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வாகன சோதனையின் போது சரக்கு வேன் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அந்த வேன் டிரைவர், அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Update: 2018-12-10 22:15 GMT
சேலம்,

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 48). இவர் சொந்தமாக சரக்கு வேன் ஓட்டி வருகிறார். நேற்று மாலை இவர் சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு லாரிக்கு பாடி கட்டும் மரப்பலகைகளை லோடு ஏற்றிக்கொண்டு சென்றார். ஓமலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அந்த சரக்கு வேன் சாலையின் வலதுபுறமாக வந்தது.

அப்போது சாலையின் இடதுபுறமாக நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜி.எஸ்.டி. அமலாக்கப்பிரிவு அலுவலர்கள், ரோட்டின் குறுக்கே ஓடி வந்து அந்த சரக்கு வேனை நிறுத்தியதாக கூறப்படுகிறது. திடீரென சிலர் சாலையின் குறுக்கே வந்து வாகனத்தை நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், ‘சடன் பிரேக்‘ பிடித்து தனது சரக்கு வேனை நிறுத்தினார்.

இதில் வேனில் கட்டி வைக்கப்பட்டு இருந்த மரப்பலகை கட்டுகள் அவிழ்ந்து பலகைகள் சாலையின் கீழே சரிந்து விழுந்தன. மேலும் அவை சரிந்து விழும் போது அந்த சரக்கு வேனின் கண்ணாடியும் உடைந்து சேதம் அடைந்தது.

இந்த விபத்தை தொடர்ந்து பாலமுருகன், தான் உரிய ஆவணங்களுடன் வாகனத்தில் லோடு ஏற்றி வருகிறேன். நீங்கள் எப்படி இதுபோன்ற வாகன நெரிசல் மிகுந்த இடத்தில் திடீரென குறுக்கே வந்து நிறுத்தி எனது வண்டிக்கு சேதம் ஏற்படுத்துவீர்கள் என்று கூறி சோதனையில் ஈடுபட்ட அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் தனது வண்டியை சாலையில் இருந்து ஓரமாக எடுத்து வர மறுத்தார். மரப்பலகைகள் சரிந்து விழுந்துள்ளதுடன், அவர் வண்டியை அங்கிருந்து ஓரமாக எடுக்க மறுத்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், ஓமலூர் போலீசார் அங்கு விரைந்து வந்து பாலமுருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், சோதனைச்சாவடிகள் மற்றும் வாகன நெரிசல் இல்லாத இடங்களில் அதிகாரிகள் இதுபோன்ற சோதனையை மேற்கொண்டால் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும், எனக்கு இப்போது இழப்பீடு வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அங்கிருந்து சரக்கு வேன் மற்றும் மரப்பலகைகளை அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் எதிரொலியாக அந்த சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்